×

திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சராசரியாக 657 டன் குப்பைகள் வெளியேற்றம்

*மேயர் தினேஷ்குமார் தகவல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தினசரி சராசரியாக 657 டன் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது என மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசினார். திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் 4 ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், 3 ம் மண்டல தலைவர் கோவிந்தசாமி, 2 ம் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், 1 ம் மண்டல தலைவர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த மாமன்ற கூட்டத்தில் 128 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.

27-வது வார்டு கவுன்சிலர் ரவிசந்திரன் பேசியதாவது: திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் புஸ்பா தியேட்டர் முதல் புதிய பஸ் நிலையம் வரை பறக்கும் பாலம் அமைக்க வேண்டும். குடிநீர் பிரச்ச்சனைக்கு சுமூக தீர்வு காண வேண்டும். கோடை காலம் நெருங்குவதால் குடிநீர் பிரச்சனைக்கு தனி அலுவலரை நியமனம் செய்து குடிநீர் விநியோகம் குறித்து கண்காணிக்க வேண்டும்.

43-வது வார்டு கவுன்சிலர் சாந்தாமணி பேசியதாவது: மங்கலம் ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மங்கலம் ரோட்டை அகலப்படுத்த வேண்டும். அதே போல் எனது வார்டு பகுதியில் தண்ணீர் தொட்டி கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. அதன் காங்கிரீட்கள் இடிந்து விழும் சூழ்நிலை உள்ளது. அதனை சீரமைத்து கொடுக்க வேண்டும். குப்பை எடுக்க வார்டுக்கு ஒரு டிராக்டர் தேவை. காங்கிரீட் ரோடு அமைத்து கொடுக்க வேண்டும். கருப்பு பைப் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

20-வது வார்டு கவுன்சிலர் குமார் பேசியதாவது: எனது வார்டு பகுதியில் 24 மணி நேரமும் தண்ணீர் வரும் திட்டம் உள்ளது. அந்த திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படும் பட்சத்தில் அதனை ஒட்டுவதற்கு கூட ஆட்கள் வருவதில்லை. இதனால் குழாய்களில் தண்ணீர் குறைந்த அளவே வருகிறது. இதனை சரி செய்ய வேண்டும்.

31-வது வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் பேசியதாவது: வார்டு பகுதியில் 30 இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு உள்ளது. குடிநீர் குழாய் உடைப்பு சம்ந்தமாக அதிகாரிகளுக்கு தெரிவிக்க போன் செய்தால் போனை எடுப்பதில்லை. தண்ணீர் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. குழாய் உடைப்பால் தண்ணீர் அழுத்தம் குறைவாக உள்ளது. கொங்கு மெயின் ரோடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பை கட்டாயம் சரிசெய்தால் தான் அனைத்து பகுதிகளும் தண்ணீர் வரும்.

42-வது வார்டு கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசியதாவது: நான்காம் குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆனால் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு உள்ளது. அதனை கையாள தனியாக அதிகாரிகள் இல்லை. எந்த கோரிக்கையானாலும் மாநகராட்சி அதிகாரிகள் தலையீடு செய்ய வேண்டியதாக உள்ளது. அதனால் மண்டல தலைவர்களிடம் அதிகாரத்தை பகிர்ந்து கொடுக்க வேண்டும். அதே போல் குப்பை பிரச்சனை உள்ளது.

16 வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி கனகராஜ் பேசியதாவது: எனது வார்டுக்குட்பட்ட பகுதியில் குப்பை எடுப்பதில் பிரச்சனை உள்ளது. அதனை சரிசெய்ய வேண்டும். வார்டுக்குட்பட்ட பகுதியில் தூய்மை பணியாளர்களை வரவழைத்து பணிகளை முடிக்க உத்தரவிடவேண்டும்.6-வது வார்டு கவுன்சிலர் கோபால்சாமி பேசியதாவது: பூலுவபட்டி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பூலுவபட்டி பகுதியில் சாலையை அகலப்படுத்தி கொடுக்க வேண்டும். கருப்பு பைப் போடும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும். கொசு மருத்து 5 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த மருந்து 3 வீதிகளுக்கு கூட வருவதில்லை. எனவே கூடுதலாக கொசு மருத்து வழங்க வேண்டும்.

புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடைக்கு வெள்ளை நிற பெயிண்ட் அடிக்க வேண்டும். 25-வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் பேசியதாவது: குப்பை அதிகமாக தேங்கியுள்ளது. குப்பைகள் அகற்ற ஆட்டோ, டிப்பர் லாரிகளை கொடுக்க வேண்டும். அனைப்பாளையம் பாலத்திற்கு கீழ் உள்ள ரோட்டை செப்பணிட்டு தர வேண்டும். மேலும், புதிய தார் சாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும். சிறுபூலுவபட்டி ரிங் ரோடு பகுதியில் புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும். புதிய நல்ல தண்ணீர் குழாய் இணைப்பு வேண்டி விண்ணப்பம் கொடுத்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

40-வது வார்டு கவுன்சிலர் சுபத்ராதேவி பேசுகையில், குப்பைகளை அகற்ற பேட்டரி வாகனம் மட்டுமே கொடுத்துள்ளனர். தெருவிளக்குகள் ஆட்டோமேட்டிக் சுவிச் வேலை செய்வதில்லை. அதனை சரிசெய்ய வேண்டும். குப்பை எடுப்பதற்கு ஆட்கள் குறைவாக உள்ளனர். புதிய சாக்கடை அமைத்து தர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, மேயர் தினேஷ்குமார் பேசியதாவது: திருப்பூர் மாநகராட்சி பொதுமக்களுக்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குப்பை எடுப்பதில் ஆட்கள் வராமல் இருப்பதற்கு ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி ஆட்களை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

அதே போல் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு சராசரியாக 675 டன் குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. அதே போல் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. கோடை காலம் முடியும் வரை குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய அடுத்த வாரம் கூட்டம் ஏற்பாடு செய்து அதில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மேயர் கூறினார்.

The post திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சராசரியாக 657 டன் குப்பைகள் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Tirupur Corporation ,Mayor ,Dinesh Kumar ,Tirupur ,Municipal Corporation ,Tirupur Municipal Corporation ,Dinakaran ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு தொப்பி வழங்கல்